எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட. அவற்றை மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம். சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது. இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி ‘இரவீந்திரநாத் தாகூர்’ என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
” கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.” – பதிவுகள் –
காவியக் கவியோகி தாகூர் (1861-1941)
பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.
1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.