அஞ்சலி: இசைக்கலைஞன் ஆனந்தநடேசன்

மிருதங்கக் கலைஞர் ஆனந்த நடேசன்எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம்இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கிக் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.

லண்டன் வைத்தியசாலைகளில் தமது மிகுந்த அர்ப்பணிப்போடு உன்னத பணிபுரிகின்ற வைத்தியர்களையும், தாதிமார்களையும், பணியாளர்களையும், வயது வந்தவர்களையும், பெண்களைவிட கூடுதலாக ஆண்களையும், குறிப்பாக ஆசிய மக்களையும், ஆபிரிக்கர்களையும் இந்தக் கொரோனாவைரஸ் உயிர்ப்பலியாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துயரத்தில் மூழ்கித்; தமது ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாது துவண்டுபோய் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த வேளை ஆத்மவெளியில் தன் கலைப்பயணத்தை முன்னெடுத்து வந்து ஈழத்துக் கலைஞனின் வாழ்வையும் இது பறித்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.

ஈழத்தில் யாழ் தெல்லிப்பளையில் கலைக்குடும்பத்;தில் பிறந்தவர் மறைந்த பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன். இவரின் தந்தை கந்தையா ஓவியராகவும் ஆசிரியராகவும், தாயார் இராசமலர் மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள். ஏப்ரல் 16ஆம் திகதி அவரது சுவாசக் காற்றைக் கொரோனா நிறுத்திய கொடூர செய்தி எம் நெஞ்சை அதிரவைத்தது. குறிப்பாக அவர் ஸ்தாபித்துவந்த ‘ஆனந்தாலயா மிருதங்கப் பள்ளியில்’ அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்ற மாணவர்களைக் குமுற வைத்தது. அன்பும் அரவணைப்பும் ஆத்மார்த்தமான கருணையின் வடிவில் பயணிக்கும் அருமையான ஆசான் அவர்.

Continue Reading →

எழுத்தாளர் சுஜாதா பற்றிய நினைவுகள்…

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3!
எழுத்தாளர் சுஜாதாஎழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது: ஆழமான விடயங்களை மிகவும் இலகுவான நடையில் சாதாரண வெகுசன வாசகர்களுக்கு வழங்கியது, சிறு சிறு வசனங்களை வாசகர்களைக் கவரும் வகையில் அவற்றில் புதுமைகளைப் புகுத்தி மொழிக்கு வளம் சேர்த்தமை, பல்வேறு அறிவியல் துறைகளையும் சாதாரண வெகுசன ஊடக வாசகர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான , புரிந்துகொள்ளும் நடையில் வழங்கியமை இதன் மூலம் மொழியை வளப்படுத்தியதுடன், ஒரு தலைமுறையை அறிவியல் எழுத்துகளில் ஆர்வம் கொள்ள வைத்தமை ஆகியவற்றைக் கூறுவேன்.


விஞ்ஞானச் சிறுகதைகள், நாவல்கள், மர்ம நாவல்கள், சங்க இலக்கியப் படைப்புகள் இவற்றையெல்லாம் வெகுசன வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிப்பதற்கு அவரது எழுத்துகள் தூண்டின. அவர் பாதிப்பு எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


என்னைப்பொறுத்த வரையில் வாசிப்பின் வளர்ச்சியில் அவரது எழுத்துகளுக்கும் ஒரு கட்ட முக்கியத்துவமுண்டு. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்று பல்வேறு படிக்கட்டுகளை உள்ளடக்கியதுதான் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும். அவ்வளர்ச்சியில் சுஜாதாவின் முக்கிய பங்களிப்பாக வெகுசன இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்பைக் குறிக்கலாம். ஒருவர் தீவிர வாசிப்புக்கு எடுத்த எடுப்பில் நுழைந்து விடுவதில்லை. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் , வெகுசன இலக்கியம் என்று பல படிகளைக் கடந்துதான் அந்நிலைக்கு வருகின்றார். அவ்விதம் வருபவர் கூட எப்பொழுதுமே தீவிர வாசிப்புக்குள் மூழ்கிக் கிடப்பதில்லை. அவ்வப்போது அவ்வாசிப்பிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக எளிய, இலேசான வாசிப்பிலும் ஈடுபடுவதுண்டு. அப்பொழுதும் கை கொடுப்பவை இவரைப்போன்றவர்களின் எழுத்துகளே. வாசிப்பின் ஒரு படியில் இன்பம் தந்த படைப்புகள் என்பதால் , பின்னர் அவை அழியாத கோலங்களாக வாசகர்கள்தம் உள்ளங்களில் நிலைத்து நின்று விடுவதால், அந்நினைவுகளுக்காக இத்தகைய படைப்புகளை அவ்வப்போது தட்டிப்பார்ப்பதுமுண்டு. அவ்வகையில் இவ்வகை எழுத்துகள் முக்கிய பங்கினையாற்றுகின்றன.

Continue Reading →

சுஜாதா என்றொரு எழுத்தன்: சுஜாதாவும் அனாமிகாவும்

செல்வி அநாமிகா சுகுமார்சுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .

அனேகமாக அவரது துப்பறியும் புனைவுகள் முழுவதையும் வாசித்திருக்கிறேன் எப்போதும் பி டி சாமி முதல் ராஜேஸ்குமார் என நீளும் அத்தகைய நாவல்களில் மூழ்கிப் போனது ஒரு காலம்.மூதூர் பட்டினசபை நூலகத்தில் இந்த வகை நாவல்கள் நிறையவே இருந்தன.சுஜாதா எனக்கு அறிமுகமானது “கரையெல்லாம் செண்பகப் பூ ” மூலமே.ஆனந்த விகடனில் அந்த நாவல் வந்த போது பாக்கியராசா அண்ணன் அந்த நாளில் ஆனந்த விகடனை எங்களூரில் கிரமமாக எடுக்கும் தீவிர வாசிப்பாளர்.அவர் வாசிப்புக்கு எல்லையே கிடையாது. கரையெல்லாம் செண்பகப்பூ இப்போது நினைத்தாலும் அந்த வாசிப்பின் நினைவாய் நீள்கிறது.

தமிழ் நாட்டு வார சஞ்சிகைகள் அவர் கதைகளால் நிறைந்து கிடந்தன கடைசி வரை அவர் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக பலவற்றை எழுதி வந்தார். எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானது போலவே அவர் எழுத்தால் என் மகளும் ஈர்க்கப் பட்டாள் அவரது விஞ்ஞான அறிவியல் சார்ந்த எழுத்துக்கள் அவளுக்கு பிடித்துப் போனது.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 21

அத்தியாயம் இருபத்தி ஒன்று

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.

பின்னர் புகை பிடிக்கும் குழாயில் புகையிலை அடக்கிப் பற்றவைத்து புகை இழுத்துக் கொண்டே ரோமியோ ஜூலியட் நாடகத்தின் வரிகளை மனப்பாடம் செய்தார். அவர் அவ்வாறு செய்து முடித்தவுடன் ராஜாவும், பிரபுவும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்சிகளைப் பயிற்சி செய்து பார்த்தனர். பிரபுவானவர் ஒவ்வொரு வரியையும் எவ்வாறு பேசவேண்டும் என்று ராஜாவுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தனது கரத்தை தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிரபு சிறிது நேரம் கழித்து ராஜா நன்கு நடிக்கிறார் என்றார்.

“இருந்தாலும்” அவர் கூறினார் “எருமை மாடு அல்லது அதைப் போன்றதொரு மிருகம் கத்துவது மாதிரி “ரோமியோ” என்று கத்திக் கூப்பிடக்கூடாது. மிக மென்மையாக, இனிமையாக நீங்கள் மயங்கி விழும்போது சக்தியில்லாது மெதுவாகச் சத்தமிடுவதைப் போன்று ரோ ..மி ….யோ…. என்று அழைக்க வேண்டும். இப்படி, இப்படித்தான் கூப்பிடவேண்டும். ஜூலியட் என்பவள் ஒரு அழகான மருளும் மான்குட்டியாக இருக்கவேண்டும். கழுதை மாதிரி அவள் கனைக்கக் கூடாது.”

அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். அவர்கள் இருவரும் தோணியின் இந்தப் புறம், அந்தப் புறம் என மாறி மாறி குதித்து தங்களின் வாள்களைச் சுழற்றியது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, ராஜா கால்தடுக்கி நதியினுள் விழுந்து விட்டார். எனவே, அதன் பிறகு அவர்கள் அதை நிறுத்திவிட்டு, ஓய்வாக அமர்ந்து தங்கள் வாழ்வில் நதியின் மேல்புறப் பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் தாங்கள் வாழும்போது எதிர்கொண்ட விதவிதமான சாகசங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

Continue Reading →

பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (3)

அத்தியாயம் மூன்று:  சித்துவான் தேசிய வனம்

நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது.அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது.

மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை தொடர்ந்து என்னை குத்துவதுபோல் இருந்தது.

இந்த உலகத்தில் உனது முப்பாட்டன் பிறக்க முன்பே நான் பிறந்தேன். பல மில்லியன் வருடங்கள் முன்பு இந்த உலகத்தையே ஆண்ட டைனோசரின் உறவினன் நான் தெரியுமா?
இப்படியான அலட்சியமான எண்ணம் அதனது மனதில் இருப்பது தவிர்க்கமுடியாது.

ரப்ரி நதி இமயமலையின் சாரலில் இருந்து வரும் சிறிய ஆறு . நாங்கள் தற்போது நிற்கும் காட்டு விடுதிகளுக்கும் சித்துவான் தேசிய வனத்திற்கும் இடையே ஓடுகிறது.

Continue Reading →

பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (2)

அத்தியாயம் இரண்டு: புக்காரா நகரம்

புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது.நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம்.

நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம். நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறார்கள் விமானத்தின் யன்னலோரத்து ஆசனத்தில் அமர்ந்து, இமையமலைச் சிகரங்கள் மேலாக பறக்கும்போது மனதில் டென்சிங்கையும் எட்மண்ட் ஹிலாரியையும் நினைத்துப் பார்க்காது இருக்கமுடியாது .

காலையில் செல்லவேண்டிய புத்தா விமானச்சேவை பல மணிநேரம் தாமதமடைந்து புறப்பட்டது. இமயமலை மேலாக பறப்பதால் காலநிலை சரியாக இருக்கவேண்டும். நாங்கள் சென்ற நாளன்று மேகமூட்டமாக இருந்தது. நேபாளத்தில் பல இடங்களில் மேகம் உயரத்தில் இல்லை. தரையில் வந்து இறங்கிவிடும். எனக்கும் மனைவிக்கும் இடையிலும் வந்துவிடும் என்றால் பாருங்களேன்.

Continue Reading →

நீள் கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

நீள்கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது
மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

Continue Reading →