பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.