அன்று கால்களுடன் நடமாடிய பாம்புகள் இன்று கால்களை இழந்து ஊர்வனவாய் ஊர்ந்து திரியும் விந்தையை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். மரத்தில் வாழும் ஆசிய நாட்டுப் பறக்கும் பாம்புகள் தங்கள் உடல்களைத் தட்டையாக்கிக் கொண்டு; மரத்துக்கு மரம் தாவியும், நழுவியும் செல்லக் கூடியவை. பாம்பு தோன்றிய பின்பே மனிதன் பூமியிற் தோன்றினான். அப்பொழுது மூத்த பிறப்பான பாம்பு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. மனிதனைக் கண்டதும் சீறிப் பாய்ந்து அவனைக் கொத்தி நஞ்சூட்டிக் கொன்று குவித்து வந்தது. அவன் பாம்புக்குப் பயந்தும், அதனை வணங்கியும் வந்தான். ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே, நச்சுப் பையை வைத்திருக்கும் நாகப் பாம்பே!’, ‘கண்ணபிரான் துயிலும் ஐந்து தலை நாகம்’, ‘பாம்பென்றால் படையும் அஞ்சும்’, ‘நாகர் கோயில், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில்’ போன்ற சொற் பதங்கள் மனிதன்; பாம்பை மதித்தும், பயந்தும், வணங்கியும் வந்தான் என்பதைக் காட்டுகின்றது.