அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!
இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து……….
வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு. இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.