விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.