பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு! பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு!

பேராசிரியர் கா.சிவத்தம்பி!- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் மேமன்கவி மின்னஞ்சல்வாயிலாக அறியத்தந்திருந்தார். ஈமச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார்.   ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி,  உலகத் தமிழ் இலக்கிய உலகிற்கே பேராசிரியரின் மறைவு பேரிழப்பே. ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. முதன் முறையாக இவரை நான் அறிந்து கொண்டது இவரது ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் நூல் மூலமாகத்தான். நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் , 7ஆம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் தமிழ்க் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையில் முதலாவதாக வந்ததற்காக கேடயமொன்றினையும், நூல்கள் பலவற்றையும் பரிசுப் பொருட்களாகத் தந்திருந்தார்கள். ‘மட்டக்களப்புத் தமிழகம்’, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூலொன்று, வடமோடி தென்மோடி கூத்துகள் பற்றிய நூலொன்று, இன்னும் சில நூல்களுடன் பேராசிரியரின் மேற்படி ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ நூலும் அவற்றிலடங்கும். சிறிய நூலானாலும், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய, விளங்கும் நூலது. அது முதல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பலரும் மேற்படி நூலின் அடிப்படையிலேயே தமது ஆய்வுகளைத் தொடர்ந்திருப்பார்கள். இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தின் தமிழ்ச் சங்கத்தினரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘நுட்பம்’  இதழின் ஆசிரியராகவிருந்த சமயம். அம்மலர் மிகவும் சிறப்பாக வெளிவருவதற்கு முனைவர் மு. நித்தியானந்தன் அவர்கள் மிகவும் உதவியாகவிருந்தார். அம்மலருக்கு ஆக்கங்கள் வேண்டி, அப்பொழுது யாழ்பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானபீட மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இருவருமே இதழுக்குக் கட்டுரைகள் தருவதாக உறுதியளித்தார்கள். ஆயினும் அச்சமயம் பேராசிரியர் க.கைலாசபதியிடமிருந்து மட்டுமே உரிய நேரத்தில் கட்டுரை எமக்குக் கிடைத்தது.  பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீண்டும் ஒருமுறை எழுப்பின. அவரது மறைவையொட்டி, கானாபிரபாவின் வலைப்பதிவிலிருந்து பேராசிரியர் மெளனகுருவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய பகிர்வுகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். –  வ.ந.கிரிதரன் , பதிவுகள் –

Continue Reading →