இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் வியக்க வைக்கும். வெகு சாதாரண வாசகனையும் கவர்ந்து கொள்ளும். அவருடைய சம்பிரதாய கட்டுப்பாடுகளை மீறும் கதைகளில் காணும் ஆழம்,, கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உருவாக்கப்படும் தீவிரம், எல்லாம் ஒரு விமர்சகனை வியக்க வைக்கும் அதே சமயம் அவரது சொக்க வைக்கும் நடையழகும், வெகு சுலபமாக எவ்வித சிரமமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளாலேயே ஆன கதை சொல்லும் நேர்த்தி எல்லாம் எந்த சாதாரண வாசகனையும் மனம் கவரும்.. சாதாரணமாக நம்மில் பெரும்பாலாருக்கு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்த சிக்கலான சம்பவமுமோ, அல்லது சிந்தனையுமோ வெகு எளிதாக அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் ஜானகிராமனால் சொல்லிவிட முடிகிறது. தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாத சாதாரண கதை படிக்கும் வாசகன் இத்தகைய எழுத்தின் ஆழத்தை உணர்த்து கொள்ளாமல் படித்துச் செல்லக்கூடும் தான். ஆனால் ஜானகிராமன் எழுத்து தரும் சுகானுபவத்தில் அவன் தீவிர ஜானகிராமன் ரசிகனாகிவிடுகிறான் இதெல்லாம் போக, ஜானகிராமனின் எழுத்தில் காணும் பரிகாசமும் கேலியும் யாரையும் துன்புறுத்தாத மென்மையும் விடம்பன குணமும் கொண்டது. இது எந்த ரக வாசகனையும் கவர்ந்து ரசிக்க வைக்கும்.