டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ”விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.
“இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.