//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// – ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் –
இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது ‘இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது ‘ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.’ என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.