பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச்சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்சுப்ரபாரதிமணியன்சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த  இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 20: மறக்க முடியாத ‘ஈழநாடு’ மாணவர் மலர்….

– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. –

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகைக்கும் , குறிப்பாக அதன் ‘மாணவர் மலர்’ பகுதிக்கும் முக்கியத்துவமுண்டு. அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு மாணவர் மலரில் ‘தீபாவளி இனித்தது’ என்றொரு கட்டுரைப் போட்டியினை உயர்தர மாணவர்களுக்காக அறிவித்திருந்தார்கள். அதற்கு நானுமொரு கட்டுரையினை …’தீபாவளி இனித்தது’ என்னும் தலைப்பில் அனுப்பினேன். அப்போட்டியில் தெரிவான கட்டுரை கண மகேஸ்வரனின் கட்டுரை. அவர் அப்பொழுது உயர்தர மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார். எனது கட்டுரை பிரசுரமாகவில்லையென்றாலும், வவுனியா மகா வித்தியாலயத்து ஆறாம் வகுப்பு மாணவன் கிரிதரனின் கட்டுரை நன்றாக இருந்தது என்னும் அர்த்தத்தில் குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. அந்த வயதில் அது எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. அதன் பின்னர் சுதந்திரனுக்குப் பொங்கல் கவிதையொன்றினை எனது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் அனுப்பினேன். அது தான் முதன் முதலாகப் பத்திரிகையொன்றில் வெளியான எனது கவிதை. இதன் பின்னர் அவ்வப்போது ஈழநாடு மாணவர் மலருக்குக் கவிதைகள், கட்டுரைகள் அனுப்பியிருக்கிறென். அவற்றையும் ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியிருந்தது. பீன்னர் எனது பதின்ம வயதில் எனது சிறுகதைகள் நான்கு ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. கட்டுரைகள் சிலவும் ,’நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’, மற்றும் ‘பழைமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம்’ பற்றி எழுதியவை, ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியுள்ளன. அப்பொழுது ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரை நான் ஒருமுறையும் சந்தித்ததில்லை. ஆனால் அவர்தான் என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்குவித்தவர். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் ‘ஈழநாடு சிறுகதைகள்’ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை ‘மல்லிகை ஆண்டு மலரொன்றில் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் அவர் என்னை ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிக்லொருவராகக் குறிப்பிட்டு, எனது ‘மணல்வீடுகள்’ என்னும் சிறுகதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பை இன்னும் நினைவு வைத்து இதுபோன்றதொரு கட்டுரையினை எழுதிய செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவர். இது போல் ‘இலங்கையில் வெளியான ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான புனைகதைகள் பற்றியும் (சிறுகதை, நாவல் போன்ற) யாராவது எழுதினால் நல்லது. அவை பயனுள்ள ஆவணப் பதிவுகளாகவிருக்கும்.

Continue Reading →