தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அறக்கட்டளையினால் $8,500 உதவித் தொகையாக இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. 100 சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ‘நிலவற்ற இரவு’ (“Moonless Night”) என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. அதற்காகவே, மேற்படி தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்காகவும், வெளியிடுவதற்காகவும் தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்படும் 100 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். வெளிவரும் நூலானது பொதுசன நூலகங்கள், சமுக அமைப்புகளில் மட்டுமல்லாது இணையத்திலும் விற்பனைக்கு விடப்படும். இவ்வாறு ஒண்டாரியோ டிரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கிறது. 1999 இலிருந்து இதுவரையில் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு $500,000ற்கும் அதிகமான உதவித் தொகையினை மேற்படி ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை பெற்ற அமைப்புகளின் விபரங்களை ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. யாரும் சென்று பார்க்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://www.otf.ca/en/index.asp
[ நா.ரகுநாதன் வெங்கட் சாமிநாதனுக்கு எழுதிய கடிதங்கள – இங்கே ]
எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை வந்த மாலையே எடுத்துச் சென்று, படித்துத் திரும்ப மறு நாள் மாலை கொடுக்கச் செல்லும் ராய் புக் செண்டர் வரை செல்லும் ரோடு அது. வழியில் ஒரு இடத்தில் இடது பக்கம் திரும்பினால் நாயர் மெஸ் வலது பக்கம் திரும்பினால் வைத்தியநாத அய்யர் மெஸ். இவையெல்லாம் இன்று மறைந்து விட்ட புராதன சரித்திரச் சின்னங்கள். அந்த ரோடில் 1962-ல் ஒரு நாள் மாலை ஒரு பஞ்சாபி கடையில் வாங்கியது தான் ரசிகன் கதைகள் – நா ரகுநாதன் என் நினைவில் இது தான் முதல் அறிமுகம். பின்னர் சில வருடங்கள் கழிந்து ரசிகன் நாடகங்கள் – நா ரகுநாதன். 1965-ல் வெளிவந்தது. அது பின்னர் எழுத்து பத்திரிகையிலும், தினமணி, சுதேசமித்திரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் மெயில், ஹிந்து, ஸ்வராஜ்யா போன்ற பத்திரிகைகளிலும் மதிப்புரைகளில் கண்டு கொள்ளப் பட்டுள்ளன என்று ரசிகன் நாடகங்கள் புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.