[ 13-10-2004 திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. – பதிவுகள்] இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான் தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.