15 மகன் திரும்பல
“நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”
“பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது சமை…..அம்பிகை பசி வயிற்றைக் கிள்ளுது…..!” சமையலில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட தினகரன் மனைவியின் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
“என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி நேரத்திலே உங்களுக்குப் பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை சில நிமிடத்தில் தேநீர் கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.
இரவு மணி ஏழு. இன்னும் பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை சமையல் வேலைகளில் மும்முரம் காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில் வேலைக்குச் சென்ற மகன் இன்னும் இல்லம் திரும்பாமல் இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.