கவிஞர் சேரன் இன்று சர்வதேசரீதியில் நன்கறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களிலொருவர். வின்சர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளை உள்ளடக்கிய பிரிவில் பணிபுரிபவர். இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலுக்கு என இவரது பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ (IN A TIME OF BURNING), ‘இரண்டாவது சூரிய உதயம் ( A SECOND SUNRISE), தொகுதிகளாக வெளிவந்து வரவேற்பினைப் பெற்றுள்ளன. செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சேரனின் கவிதைகள் You Cannot Turn Away என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. இத்தொகுதி சேரனின் நாற்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் தொகுதி தமிழ் / ஆங்கிலத்தில் இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் லக்சுமி ஹோம்ஸ்றம்ம்மின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான சேரனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இங்கிலாந்து பேனா அமைப்பினரின் மொழிபெயர்ப்புக்கான 2012 ஆண்டு விருதினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பும் தமிழ் / ஆங்கில இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.