– யாழ். பொது நூலகம் இனவாதிகளினால் 1981 மே (31-05-1981) மாதம் எரிக்கப்பட்டு முப்பத்திமூன்று வருடங்களாகின்றன. அதன் நினைவாக இந்தப்பதிவு. –
எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச் செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம் – கல்கண்டு – கல்கி – ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்குதான் படித்தேன்.
கல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசுபெற்ற உமாசந்திரனின் முள்ளும் மலரும் (பின்னர் ரஜனிகாந்த் – ஷோபா நடித்து பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும் மகேந்திரனின் இயக்கத்திலும் வெளியான படம்) ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் – பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றையும் அந்த நூலகத்தில்தான் படித்து முடித்தேன். அக்காலம் முதலே எனக்கும் நூலகம் பற்றிய கனவு தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டிலேயே Murugan Library என்ற பெயரில் ஒரு நூலகத்தை தொடங்கினேன். மாதம் 25 சதம்தான் கட்டணம். எனது அம்மாதான் முதலாவது உறுப்பினர். அயலில் சிலர் இணைந்தனர். அதற்கென ஒரு Rubber Stamp தயாரித்து சிறிது காலம் அந்த நூலகத்தை நடத்தினேன். ஆனால் – தொடரமுடியவில்லை. புத்தகங்களை எடுத்துச்சென்ற சிலர் திருப்பித்தரவில்லை. மனம் சோர்ந்துவிட்டது.