– இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி –
இது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள் இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையூடாக ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச்சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச்சொல்ல உண்மைகள் உதவிக்கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.