இலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன. அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த மகாஜனன் நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது. அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும் இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி அவர்களாவார். அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.
1. ஈழத்து இலக்கியமும் மகாஜனக் கல்லூரியும் – ஒரு தொடக்கநிலைக் குறிப்பு
ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும் இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’ எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம்.