தகவல்: முருகபூபதி letchumananm@gmail.com
இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளான கருணாகரன் – கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் -ஊடகவியலாளர் – சில நூல்களின் பதிப்பாளர் – இலக்கிய இயக்க செயற்பாட்டாளர். எனக்கு கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமானது 2008 இல்தான். லண்டனில் வதியும் முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில் மறைந்த செம்பியன் செல்வனைப்பற்றி கருணாகரன் எழுதியிருந்த கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப்பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத்தொகுப்பில் மிகவும் பிடித்தமான அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள் முல்லை அமுதனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009 இல் மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் குறிப்பிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன் தமிழகம் திரும்பியதும் எழுதியிருந்த புல்வெளிதேசம் நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.