“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.
இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.