தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.
2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.
இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.