ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இலக்கியத் திறனாய்வில் தங்கள் பங்களிப்பை நல்கியவர்களில் கே.எஸ்.சிவகுமாரனுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவரது கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் பிரசுரித்து வருகின்றன. அவரது பங்களிப்பு எத்தகையது என்பதைச் சிறிது ஆய்வுக்கண்ணோட்டத்தில் சிந்திப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். இவரது பத்தி எழுத்துகள் அதிகமாக வெளிவருவதால் இவர் தன்னையொரு பத்தி எழுத்தாளராகவே அடிக்கடி கூறிக்கொள்கின்றார். தான் எழுதுவது இலக்கியத் திறனாய்வுகளல்ல வெறும் மதிப்பரைகள்தாம் என்று கூறிக்கொள்கின்றார். இவர் எழுத்துகள் வெறும் புத்தக மதிப்புரைகளா? அல்லது காத்திரமான இலக்கியத் திறனாய்வுகளா? இவ்வகையான எண்ணம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் அடிக்கடி தான் எழுதுவது வெறும் மதிப்பபுரைகள்தாம் என்று கூறிக்கொள்வதுமென்பதென் கருத்து. இது பற்றிக் கலாநிதி கார்த்திகேச சிவத்தம்பி அவர்களும் ‘திறனாய்வுப்பார்வைகள்” – பத்தி எழுத்துகளும் பல் திரட்டுகளும் 1 -(1966இல் வெளிவந்த நூல்) என்னும் கே.எஸ்.எஸ். அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: