இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், ‘பதிவுகள்’ இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும், பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. – -பதிவுகள் –
சுதாராஜ் சிறுகதைகள்
எம். ஏ. நுஃமான்
1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.