– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –
அத்தியாயம் நான்கு!
ஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், ‘பெடியன்கள்’ என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
சில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.