இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில் சுப்ரபாரதிமணியனின் நாவல் ” தறி நாடா “ சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர்களில் சிலர்: ஆட்டனத்தி, க.ப அறவாணன்,( சிறுகதை ), யூமா வாசுகி ( மொழிபெயர்ப்பு ), தஞ்சாவூர் கவிராயர் ( கவிதை ), தேவி நாச்சியப்பன் ( சிறுவர் இலக்கியம் ), இரா. மோகன் ( இலக்கிய ஆய்வு ) வீரநாதன் ( அறிவியல் ), மதுரை கர்ணன்.( பொது ) மற்றும் இலக்கிய இதழ்கள் முகம், தொடரும், ஆலம்பொழில் . சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் தலைமையிலான் குழு விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.