– வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. –
யாழ் இந்துக்கல்லூரி: புண்ணயலிங்கம் ‘மாஸ்டர்’!
நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலகட்டத்தில் அங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த இலக்கிய ஜாம்பவான்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சொக்கன், தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோரைக் குறிப்பிடலாம். பண்டிதர் கணபதிப்பிள்ளை என்பவரும் அவ்வப்போது தமிழப்பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இவர்கள் யாரிடமும் எனக்குக் கல்வி கற்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் இவர்களில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் ‘மணிபல்லவம்’ என்னிடம் இருந்தது. ஆங்கில ‘கிளாஸி’க்குகளிலொன்றான ‘ரொபேர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்’ எழுதிய ‘புதையல் தீவு’ (Treasure Island) நாவலின் தமிழாக்கமது. சுவையாக மொழிபெயர்ப்பு இருந்ததாக ஞாபகம். ஏனெனில் அச்சமயம் ‘மணிபல்லவம்’ நாவலை விரும்பி வாசித்திருக்கிறேன்.
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்கு நினைவில் வரும் ஆசிரியர்களிலொருவர் புண்ணியலிங்கம் ‘மாஸ்டர்’. இணுவில் பக்கமிருந்து வந்தவரென்று ஞாபகம். உயரமான ஆகிருதி. சிரித்த முகமும், சந்தனப்பொட்டுமாகக் காட்சியளிப்பார். அவர் சிரிக்கும்போது வாயெல்லாம் பற்கள் தெரியும். விகடன் ‘கார்ட்டூன்’களில் வருபவர்கள் சிரிப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். அவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பெளதிகவியல் பாடம் எடுத்தவர். அந்த ஒரு வருடம்தான் அவரிடம் நான் பாடம் எடுத்திருக்கின்றேன். ஆனால் அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் நினைவில் பதிந்து விட்டதற்குக் காரணம் அவர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைதான். அவர் கற்பிக்கும்போது கற்பிக்கும் விடயங்களை நடைமுறையில் செய்து காட்டிக் கற்பிப்பதில் விருப்பமுள்ளவர்.