நிலத்துக்கும் ஆகாயத்துக்குமிடையில்
அந்தரவெளியில் நீந்திவரும்
பறவைகளை வரவேற்றுக்கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப்பறவை
எப்போது வந்து எங்கே அமருமென்று…? – கருணாகரன்
இந்தப்பத்தியை எழுதும் வேளையில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைந்த செய்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு இந்தப்பத்தியை தொடருகின்றேன். சிங்கப்பூருக்கு சென்றதும் மைத்துனர் விக்னேஸ்வரன் தனது நண்பர்களுக்கு எனது வருகை பற்றி அறிவித்தார். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்பான தகவல் அமர்வு கலந்துரையாடலுக்காக அவர் ஒரு சந்திப்பை ஒழுங்குசெய்திருந்தார்.
பொதுவாகவே இலங்கையில் நீடித்த போரும் – இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த அழிவுகளும் தொடர்பாக மலேசியா, சிங்கப்பூர் தமிழ் மக்களிடம் ஆழ்ந்த கவலை இருந்தது. இம்மக்களில் இலங்கைத்தமிழர்களும் இடம்பெற்றாலும், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நிரம்ப வேறுபாடும் நீடிக்கிறது. மலேசியாவில் வதியும் இந்திய வம்சாவளியினர் குறித்த உரிமைப்போராட்டம் நாம் நன்கு அறிந்ததே. ஆனால், சிங்கப்பூரில் அந்த நிலைமை இல்லை. தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளுக்கு அரச அங்கீகாரம் வழங்கியவாறு சிங்கப்பூர் அரசு இயங்குகிறது. சிங்கப்பூரில் நின்றவேளையில் தைப்பூசத்திருவிழா வெகு கோலாகலமாக நடந்தது. அரசின் அமைச்சர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். மக்களின் பக்திப்பரவசம் கரைபுரண்டு ஓடியது. பக்தர்கள் வேல் குத்தி ஆடியவாறு தமது ஆழ்ந்த நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்கள். வருடாந்தம் நடக்கும் தைப்பூசத்திருவிழா அங்கு தொடர்ந்து கோலாகலமாகவே கொண்டாடப்படுகிறது. ஆனால், சிங்கப்பூரில் பறவைக்காவடி தடை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தேன். மனிதன் தன்னைத்தானே வருத்துவதை நகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாது . ஆனால் – காலம் காலமாக நீடிக்கும் மத நம்பிக்கையை தடுப்பதற்கு சில நாடுகளின் அரசுகள் முன்வருவதற்கு தயக்கம் காட்டுகின்றன.