கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும்.
வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன.
வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த இருவருடங்கள் திருமணவீட்டு பன்னீராக மாரிகாலம் ஊரைக் கடந்து சென்று விட்டது.
அதிகாலையில் மேற்கு வானில் தொலைதூரத்தில் கருமேகம் தோன்றி கடல் நீரை குழாய்போட்டு இழுத்தபோது, இது மழைக்கான அறிகுறி என நினைத்தாலும் எதுவும் செய்ய நேரமில்லை. மழை பொய்த்தால் கூரைகளை மேய்வதற்கு தவறியவர்கள். பிடித்த மீன்களை உப்புபோட்டு மதியம் காயவைக்கலாம் என்றிருந்த மீனவர்கள் சுதாரித்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை.
மதியத்தில் வந்த மழை விடாமல் பெய்தது.
ஊரில் எல்லோருக்கும் ஆனந்தம் பெருகியது. கடந்த இரண்டு வருடங்கள் நல்ல மழையில்லாமல் பயிர்கள் வைக்காதவர்களில் சில அவசரக்காரர்கள், இந்த வருடம் பயிரிடமுடியும் என்ற சந்தோசத்தில் தரிசான தோட்டங்களிலும் மற்றும் வீட்டுக்கு பின்புறத்திலும் நனைந்தபடி மாலையில் மண்வெட்டியால் நிலத்தை கொத்தத் தொடங்கினர். பெய்த மழையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.