சிறுகதை: சிக்குண்ட சினம்

- ஸ்ரீரஞ்சனி -வீடியோக் கமெராவின் மிகையான வெளிச்சத்திலும் அதிலிருந்து வரும் வெப்பத்திலும் என்னுடைய முகம் வியர்க்கிறது, கண்கள் கூசுகின்றன. வீடியோக் கமெராக்காரரினதும், படமெடுப்பவரினதும் அறிவுறுத்தல்களுக்குத் தக்கதாகத் திரும்பித் திரும்பி அலுத்துப் போய்விட்டது.

“நிரோ வடிவாச் சிரியும் பாப்பம். உதென்ன சிரிப்பு,” இது மாமியின் விமர்சனம். எனக்கு அழ வேணும் போல் இருக்கிறது. பிறகெப்படி நெடுகப் பொய்யுக்குச் சிரிக்கிறது? அதை விட சிரிக்கிறதாய் பாசாங்கு பண்ணிப் பண்ணி வாய் ஒரு பக்கம் நோகிறது.

“பெரிய ஹோல், குறைஞ்சது முன்னூறு பேர், பூ ஊஞ்சல்…, உதுகளைக் கேட்கக் கேட்க எனக்கு குமட்டுது. பிளீஸ் அம்மா எனக்கு உது ஒண்டும் வேண்டாம்,”

“நிரோ, நீ எங்களுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. உன்ரை கலியாண வீட்டைப் பாக்க நாங்கள் இருப்பமோ இல்லையோ… அதைவிட நீ ஆரை, எப்படிக் கலியாணம் கட்டுவியோ ஆருக்குத் தெரியும். இதை எங்கடை ஆசைக்குச் செய்து பாக்க வேணும். அதோடை எல்லோரும் செய்யேக்கை நாங்கள் செய்யாட்டி அது எங்களுக்கு மரியாதை இல்லை,”

“இயற்கையிலை நடக்கிற ஒரு விஷயத்தை ஏன் இப்படிப் பெரிசுபடுத்திறியள், எல்லாரும் தான் சாமத்தியப்படுகினம்; உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கேல்லைத் தானே.”

Continue Reading →

” இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் ” என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன்

கடல்  அலைகள்,  பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின்  நம்பிக்கை,
இராமேஸ்வரம்   பள்ளிவாசல்  தெரு,
இவையெல்லாம்  ஒன்று  கலந்த  உருவம்  நீ…
என்  அன்னையே…
உன்  ஆதரவுக்கரங்கள்  என்  வேதனையை  மென்மையாய் அகற்றின
உன்  அன்பும்  ஆதரவும்  நம்பிக்கையும்  எனக்கு  வலிமை   தந்தன.
அதைக்கொண்டே  நான்  இந்த  உலகை
அச்சமின்றி   எதிர்கொண்டேன்
என்   அன்னையே…  நாம்  மீண்டும்  சந்திப்போம்
அந்த   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாளில்.

abdulkalam5.jpg - 3.04 Kbமுருகபூபதிஇவ்வாறு  தமது  அன்னையை   நினைத்து  கவிதை   எழுதிய  பாரத ரத்னா  அப்துல்கலாம்,  தமது  அன்னையிடமே   சென்றுவிட்டார். அவர்   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாள்  என்று  எதனைக் குறிப்பிட்டார் என்ற  விளக்கம்  இங்கு  அவசியமில்லை. ஒரு  விறகு  வெட்டியின்  மகன்  அமெரிக்காவின்  ஜனாதிபதியானார். ஒரு    செருப்புத்தைக்கும்  தொழிலாளியின்  மகன்  ருஷ்யாவில் அதிபரானார். பாரத  நாட்டில்  ஒரு  படகோட்டியின்  மகன்  ஜனாதிபதியாகி  இன்று மக்களின்    மனங்களில்  வாழ்ந்துகொண்டு   விடைபெற்றார். இராமேஸ்வரமும்    இராமனும்  அரசியலாகிய  கதை   தெரியும். இராமர்    பாலம்  அமைத்த  இராமன்  எந்த  பொறியியல்  கல்லூரியில் படித்தான்   எனக்கேள்வி  கேட்டவரின்  தலையை   கொய்து எறியப் போனவர்களின்  செய்தியும்  தெரியும்.   இராமரா  –   பாபர் மசூதியா  என்ற  போர்க்களத்தில்   மாண்டுபோன  இன்னுயிர்கள் பற்றியும்   அறிவோம். இந்தப்பின்னணிகளுடன்    இலங்கையையும்  இந்தியாவையும் பிரிக்கும்   கடல்  எல்லைக்  கடலோரக்  கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்து,  இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த   அப்துல்  கலாம்  என்ற  பிரம்மச்சாரி    விஞ்ஞானியாகவும்  எழுத்தாளராகவும்   திகழ்ந்தவர்.

எழுச்சித்தீபங்கள்  –   இந்திய  ஆற்றலின்  ஊற்றுக்கண்  என்ற  தமது  நூலை   ஒரு   பன்னிரண்டாம்    வகுப்பு  படிக்கும்  மாணவிக்கே சமர்ப்பணம்  செய்திருந்தார். அவர்   அதற்கான  காரணத்தையும்  இவ்வாறு  சொல்கிறார்.

Continue Reading →