-அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
அலையோர வெண்மணலில்
நாம் பதித்த கால் தடங்கள்
இல்லாத இடங்கள் இல்லை
விஜயலட்சுமி சேகர் நெய்தலில் கடலின் நடுவே போர்ட் சிட்டி – குறிஞ்சியில் மலையடிவாரத்தில் லயன் சிட்டி கடல் மட்டும் மாறிவிடாத காலிமுகம் \கடலும் கடல் சார்ந்த பிரதேசமும் நெய்தல் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. இலங்கையில் ஐந்து திணைகளும் ( குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை, பாலை ) இருக்கின்றனவா…? என்று ஆராய்ந்தால் பாலை ( எதுவும் பயிரிட முடியாத நிலம் ) இல்லையா என்று நாம் யோசிப்போம். . ஆறாம் திணை நவீன தமிழ் இலக்கியத்தில் பிறந்துள்ளது. நான் பிறந்த நீர்கொழும்பும் இலங்கைத்தலைநகரும் நெய்தல் நிலப்பிரதேசங்கள். எங்கள் ஊரில் கடலின் ஓயாத அலையோசையை கேட்டவாறே பிறந்து – தவழ்ந்து – வளர்ந்து வாழ்ந்தமையினால் கடலின் மீது தீராத காதல். ஆனால் – சுனாமி கடற்கோள் வந்தபொழுது எனக்கு கடல் மீது கடுமையான வெறுப்பு தோன்றியது. அவ்வாறே 1978 இல் கிழக்கில் சூறாவளி வந்தபொழுது காற்றின் மீது வெறுப்புத்தோன்றியது. மலையகத்தில் மண் சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் வேளைகளில் தண்ணீர் மீது ஆத்திரம் வருகிறது.