பிரபல கலை , இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் தனது முகநூல் குறிப்பில் தனது ‘மியூசியம்’ என்னும் கவிதையினை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையாகக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் தேர்வு செய்யப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்ட ”In Our Translated World” என்னும் ஆங்கிலமொழிபெயர்ப்பில் வெளியான கவிதைத்தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இது பற்றி இதுவரையில் பலரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் பயன் எதுவுமில்லையென்றும் வருத்தப்பட்டிருக்கின்றார்.
இது பற்றிய குற்றச்சாட்டினை இப்பொழுதுதான் முதல் முதலாக நான் அறிகின்றேன். Ontario Trillium Foundation அமைப்பின் நிதி உதவியுடன் வெளியான நூலிது. இதில் இவ்விதம் தவறு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எவ்விதம் இவ்விதமானதொரு தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். ஏன் இது பற்றி இதுவரையில் கவிஞர் ஜெயபாலன் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.
இந்த நூலின் மீள்பதிப்பு விகடன் பதிப்பாகவும் வெளியாகியிருப்பதாகவும் இந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்பிரச்சினைக்குரிய சரியான தீர்வு இந்த ஆங்கில நூலினை மீண்டும் தவறினைத்திருத்தி, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வெளியிடுவதுதான். அத்துடன் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் பகிரங்கமாகவும் தனது தவறுக்காகவும், கவிஞர் இந்திரனுக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.