‘போட்டோஷாப்’ மென்பொருளை உருவாக்கியவர்களிலொருவரான தஞ்சாவூர்த்தமிழரான சீதாராமன் நாராயணன் என்னும் தமிழருடனான நேர்காணலை விகடன் பிரசுரித்திருந்தது. அதன் வாசிப்பின்போது தோன்றிய சிந்தனைத்துளிகளே எனது இக்குறிப்புகள்.
‘சுந்தர் பிச்சை மற்றும் சீதா ராமன் நாராயணனைப்போன்றவர்களெல்லாரும் எதற்காகச் சொந்த மண்ணுக்குப் பயன்படாமல் பிறதேசத்தவர்களுக்குப் பயன்படும் வகையிலான வாழ்வினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? எப்பொழுது தமிழர்கள் உருவாக்கும் மென்பொருள்கள் அவர்கள் வாழும் மண்ணிலிருந்து உலகெங்கும் பரவிச்சாதிக்கப்போகின்றது? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. சபீர் பாட்டியா போன்று என்று நம்மவர்கள் சொந்தமாகத் தங்கள் மென்பொருள்களை உருவாக்கிச் சாதனைகள் புரியப்போகின்றார்களென்று எண்ணுவதுண்டு.
இந்தப்பேட்டியில் இவர் கூறிய கருத்தொன்று என்னைக் கவர்ந்தது. அது: “ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே”