[ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில் ‘சிலோன் விஜயேந்திரன்’ பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு ‘சிலோன்’ விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து…
சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
‘லட்சக்கணக்கான வாசர் வியாபத்தைக் கொண்ட, தமிழ் இலக்கிய உலகம் அறிந்த எழுத்தாளர் குரு அரவிந்தன், சிறுகதைகள் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்’ என்று எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய குரு அரவிந்தன் சிறுகதை பற்றிக் குறிப்பிடும் போது தனது அனுபவங்களையே முன்வைத்தார்.
சிறுகதை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சீரான நடையோடு கற்பனைத் திறன் கலந்து சொல்வதுதான் சிறுகதை என்பது எனது கருத்து என்று குறிப்பிட்ட அவர், சிறுகதை மையக்கருவோடு அதாவது கதையின் நோக்கத்தோடு ஒன்றிப்போனால் மிகவும் சிறப்பாக அமையும். வாசகர்களுக்கு அதை வாசிக்கும் போது அந்தக் கற்பனைப் புனைவு மனதில் ஏதாவது நெகிழ்வை ஏற்படுத்துமானால், அது தரமான ஒரு சிறுகதையாகக் கணிக்கப்படலாம். சிறுகதை எப்படி இருக்கக்கூடாது என்று பார்ப்போமேயானால், கட்டுரைத் தன்மையில் இருந்து மாறுபட்டிருக்க வேண்டும். சிறுகதையில் உபகதைகள் சொல்ல வெளிக்கிட்டால் அது குறுநாவலுக்கான முயற்சியாக மாறிவிடலாம். அதுமட்டுமல்ல, சிறுகதையில் உபதேசத்தைத் தவிர்ப்பதும் நல்லது என்றே எண்ணுகின்றேன் என்றார்.