வீடியோக் கமெராவின் மிகையான வெளிச்சத்திலும் அதிலிருந்து வரும் வெப்பத்திலும் என்னுடைய முகம் வியர்க்கிறது, கண்கள் கூசுகின்றன. வீடியோக் கமெராக்காரரினதும், படமெடுப்பவரினதும் அறிவுறுத்தல்களுக்குத் தக்கதாகத் திரும்பித் திரும்பி அலுத்துப் போய்விட்டது.
“நிரோ வடிவாச் சிரியும் பாப்பம். உதென்ன சிரிப்பு,” இது மாமியின் விமர்சனம். எனக்கு அழ வேணும் போல் இருக்கிறது. பிறகெப்படி நெடுகப் பொய்யுக்குச் சிரிக்கிறது? அதை விட சிரிக்கிறதாய் பாசாங்கு பண்ணிப் பண்ணி வாய் ஒரு பக்கம் நோகிறது.
“பெரிய ஹோல், குறைஞ்சது முன்னூறு பேர், பூ ஊஞ்சல்…, உதுகளைக் கேட்கக் கேட்க எனக்கு குமட்டுது. பிளீஸ் அம்மா எனக்கு உது ஒண்டும் வேண்டாம்,”
“நிரோ, நீ எங்களுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. உன்ரை கலியாண வீட்டைப் பாக்க நாங்கள் இருப்பமோ இல்லையோ… அதைவிட நீ ஆரை, எப்படிக் கலியாணம் கட்டுவியோ ஆருக்குத் தெரியும். இதை எங்கடை ஆசைக்குச் செய்து பாக்க வேணும். அதோடை எல்லோரும் செய்யேக்கை நாங்கள் செய்யாட்டி அது எங்களுக்கு மரியாதை இல்லை,”
“இயற்கையிலை நடக்கிற ஒரு விஷயத்தை ஏன் இப்படிப் பெரிசுபடுத்திறியள், எல்லாரும் தான் சாமத்தியப்படுகினம்; உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கேல்லைத் தானே.”