தகவல்: ‘காலம்’ செல்வம் tamilbook.kalam@gmail.com
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் 6 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நிகழ்ச்சிகளை திரு, திருமதி கணநாதன் தம்பதியர் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள். திருமதி சகுந்தலா கணநாதன் ஆங்கிலத்தில் படைப்பு இலக்கியம் எழுதும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. திருவாளர்கள் அ. நாகராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் தமிழ்ப்பெண் வாழ்த்து, தமிழ்த்தாய் நடனம் என்பனவற்றுடன் அரங்குகள் ஆரம்பமாகும். கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில் இவர்களின் பார்வையில் பெண் என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கில், அறவேந்தன், வெள்ளையன் தங்கையன், நந்தகுமார் இராமலிங்கம், சகீம் மாத்தயஸ், கேதா ஆகியோர் பங்குபற்றுவர்.
‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
‘புலம்யெயர் தமிழர்களின் அடையாளம் எது என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வளவுதூரம் எமது தாய்மொழித் தமிழை பயில்வார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அமெரிக்காவில் யூதமக்கள் அவர்களின் தாயக மொழியான கீபுறு மொழியைத் தெரியாத சமூகமாக வளர்ந்திருப்பதைப்போன்றே புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினர் தமிழ்த் தெரியாத தமிழ்ச் சமூகமாக உருப்பெறும் நிலை உருவாகலாம்’ என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
‘புலம்பெயர் நாடுகளில் அமைந்துள்ள ஊர்ச்சங்கங்கள் சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. 1960 களில் இருந்த நிலையைவிட இன்று தாயகத்தில் சாதிய வேறுபாடுகள் கூர்மையுற்று வருவதை அறிய முடிகிறது’ என்று ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா கருத்துத் தெரிவித்தார்.