[ மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பு நூலானது முக்கியமானதொரு மைல் கல்லாகும். இது போன்று ஏனைய சஞ்சிகைகளின் தொகுப்பு நூல்களும் வரவேண்டும். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்த முடியும். இது போல் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் திறனாய்வுக்கட்டுரைகள் போன்றவையும் பல்வேறு தொகுப்புகளாக வெளிவருவது நல்லது. அவ்விதம் வெளியிடுவதற்கு மிகுந்த பொருட்செலவாகுமென்பதால், அவற்றை முதலில் மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடலாம். இவ்விதம மின்னூல்களாக அவை இருப்பது இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்ற முறையாகப்புரிந்து கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும்.
தற்போது தொகுப்பு நூலாக வெளிவந்த ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பும் மின்னூலாக இணையத்தில் ‘நூலகம்’ போன்ற தளங்களில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இவ்விதம் இணையத்தில் மின்னூல்களாக இவை இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றி பல்வகை ஆய்வுகளை, திறனாய்வுகளைப்புரிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். – பதிவுகள் – ]
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.