நவகாலத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் முனைவர்கள் பலர் தமக்குக் கிடைக்கும் நூல்களை மையமாக வைத்தே பெரும்பாலும் எழுதுவது வழக்கம். இதனால் நவகாலத்தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை அவர்கள் பலரின் எழுத்துகள் காட்டத்தவறிவிடுகின்றன. இணையத்தில் குறிப்பாக இணைய இதழ்களில் வெளியாகும் பல படைப்புகளை இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட முனைவர்கள் பலர் தவற விட்டு விடுகின்றார்கள். ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது.
முனைவர் நா.சுப்ரமணியன், முனைவர் இ.பாலசுந்தரம் போன்றவர்கள் கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய தமது கட்டுரைகளுக்கு ‘பதிவுகள்’ போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை, படைப்புகளை மையமாக வைத்து ஆய்வினைச்செய்திருப்பது அவதானிப்புக்குரியது. இணைய இதழ்களின் இலக்கியப்பங்களிப்பினை இவர்கள் புரிந்து கொண்டிருப்பது நல்லதொரு விடயம்.
அண்மைக்காலமாக இணைய இதழ்களில் வெளியாகிய பல்வகைப்படைப்புகள் நூலுருப்பெற்று வெளிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள் பல (நீலக்கடல் நாவல் உட்பட) திண்ணை இணைய இதழில் வெளியாகிப்பின் நூலுருப்பெற்றவைதாம். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் இவரது இலக்கியக் கட்டுரைகள், பிரெஞ்சுப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ ‘திண்ணை’ இணைய இதழில் வெளியாகி நூலுருப்பெற்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் அவர்களின் அறிவியற் கட்டுரைகள் பல திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது இலக்கியப்படைப்புகள் பல திண்ணை இணைய இதழில் வெளியாகி நூலுருபெற்றுள்ளன. இவை தவிர நடேசன் (ஆஸ்திரேலியா) அவர்களின் ‘அசோகனின் வைத்தியசாலை’ ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகிப்பின்னர் நூலுருப்பெற்றதையும், அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றது என்பதையும் மறந்து விட முடியாது. மேலும் அண்மையில் வெளியான தமிழினியின் ‘போர்க்காலம்’ கவிதைத்தொகுதி ‘பதிவுகள்’ மற்றும் தமிழினியின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் வெளியாகிப்பின்னர் நூலாக வெளிவந்ததும் கவனத்திற்கொள்ள வேண்டியதொன்று.