தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
தொடர் அல்லது வாக்கியத்தின் இலக்கணத்தைக் கட்டமைப்பது தொடரிலக்கணம். சொல்லிலக்கணக் கூறுகளே தொடரிலக்கணத்திற்கு வடிவம் தருகின்றன. எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இணைந்த வடிவமே வாக்கியம் எனும் அமைப்பைத் தருகின்றன. பெயர், வினை இவற்றோடு இணையும் உருபுகளே வாக்கியத்தின் முழுமையானப் பொருளைத் தீர்மானிக்கின்றன. “முன்பும், பின்பும் எதுவும் வருதல் வேண்டாம் என்ற அடிப்படையில் முன்பும் பின்பும் வருகின்ற விட்டிசையும், குறிப்பிட்ட குரலிசைகளையும் உடையன வாக்கியம்”1 என்று வாக்கியத்திற்கான விளக்கம் தருகிறார் டாக்டர் முத்து சண்முகன். ஆரம்ப காலத்தில் கிரேக்க இலக்கணத்தில் தொடரிலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. சொல்லிலக்கணக் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டயோனிசியஸ் த்ராக்ஸ் (Dionysius Thrax) என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாவது கிரேக்க மொழி இலக்கணம் எழுதப்பட்டது. இந்நூல் ஸ்டாயிக் மற்றும் அலெக்ஸாண்டிரிய இலக்கண அறிஞர்களைக் கடந்து வினையடை, மூவிடப்பெயர், முன்னுருபு என்னும் இலக்கணக் கூறுகளை விளக்கியது. இந்நூலில் சொற்றொடர், வாக்கியம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடரியல் (Syntax) பற்றிய சிந்தனை கிரேக்க இலக்கண மரபில் தோற்றம் பெற்றுள்ளது.
கிரேக்க இலக்கணத்தில் காணப்பட்ட தொடரியல் பற்றிய இலக்கணத்தை இந்திய இலக்கணமரபு கொண்டிருக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் இலக்கணத்தில் அத்தகைய நிலையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தொடர் பற்றிய சிந்தனை தமிழ் இலக்கண அறிவாண்மையாளர்களுக்கு இருந்துள்ளது. தொடரிலக்கணம் பற்றி தனித்துப் பேசப்படவில்லை எனினும் அதற்கானக் கூறுகளைச் சொல்லிலக்கணத்தில் காணமுடிகின்றது. “சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெழுத்து ஒருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையில் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்றும், பாட்டு உரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொன்னூல் வழி நின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்து உணர்த்துகின்றது.”2 சொல்லிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதில் தொடரிலக்கணத்திற்கான கூறுகளைத் தமிழ் மரபிலக்கணங்கள் அமைத்துக் கொண்டுள்ளதை இக்கூற்று தெளிவாக்குகின்றது.