இலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (10.03.2016 ) வியாழக்கிழமை கண்டியில் காலமானார். கடந்த ஆண்டிறுதியில் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் யாத்திரையை, துணைவியார் மஸீதா புன்னியாமீனுடன் மேற்கொண்டிருந்த இவர், புனிதக்கடமையை நிறைவுசெய்தபின் நாடு திரும்பும் வேளையில் 29.12.2015 அன்று திடீர் சுகவீனம் காரணமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு துபாய் ராஷீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரு மாத தீவிர சிகிச்சைகளின் பின்னர் 29.1.2016 அன்று இலங்கை திரும்பிய அவர், மேலதிக வைத்தியத்துக்காக மீண்டும் பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த புன்னியாமீன், அதன் தீவிர பாதிப்பினால் இறுதியில் தாயக மண்ணிலேயே எம்மை விட்டுப் பிரிந்தமை அவரது சுற்றுவட்டத்தினரை கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் பல்வேறு பரிமாணங்களிலும் அறியப்பெற்ற பீர்முகம்மது புன்னியாமீன் 11.11.1960 இல் பிறந்தவர். கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில் உள்ள உடத்தலவின்ன என்ற சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, செழிப்புற வாழ்ந்து மறைந்தவர்.
அங்கு அவர் நிறுவிய சிந்தனை வட்டம் என்ற அறிவுசார் நிறுவனத்தின் மூலம் பல நூல்களை எழுதியும் பலரது நூல்களை வெளியிட்டும், புலமைப்பரிசில் பரீட்சை சார்ந்த பல கல்விப் பணிகளையாற்றியும் சிறப்புற்ற அவர், உடத்தலவின்ன என்ற சிற்றூரின் பெயரை உலகளாவிய ரீதியில் பலரையும் உச்சரிக்க வைத்ததுடன், ஈழத்து இலக்கியத் தோட்டத்திற்கு மௌனமாகப் பொழிந்த மாமழையாக நின்று பணியாற்றியவர்.
2004 முதல் 2009 வரை இவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக எழுதித் தொகுத்து 15 தொகுதிகளில் அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார். புகலிடப் படைப்பாளிகளின் வாழ்வும் பணிகளும் பற்றிய தனியானதொரு தொகுப்பை வெளியிடும் நோக்கில் லண்டன் வந்திருந்த புன்னியாமின் ஒரு மாதம் அளவில் எமதில்லத்தில் தங்கியிருந்து புகலிடப் படைப்பாளிகளைச் சந்தித்துத் தகவல் பெற்று சிந்தனை வட்டத்தின் 236 ஆவது நூலாக அதனை 2006 இல் வெளியிட்டிருந்தார்.