1. தமிழினியின் சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ பற்றி,,
சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது”
“உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள். யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்.”
இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும்.
தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.
அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார்.
என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.