திரு ‘குடிவரவாளன்’ இன்று கனடா வந்து சேர்ந்தார்!

வ.ந.கி

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது நாவலான ‘குடிவரவாளன்’ நாவலில் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இன்று கிடைக்கப்பெற்றேன், நான் எவ்விதம் என் நாவல் வெளிவர வேண்டுமென்று விரும்பினேனோ அவ்விதமே அட்டைப்படம் முதல், நூலின் வடிவமைப்பு வரை அமைந்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. நூல் இவ்விதம் வெற்றிகரமாக வெளிவருவதற்கு இணையம் மிகவும் கை கொடுத்தது என்றுதான் கூற வேண்டும். நூலின் ஆரம்ப நிலையிலிருந்து, வெளியாகும் வரையில், ஓவியா பதிப்பக உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்கள் அலுக்காமல், சலிக்காமல் என் கருத்துகளை உள் வாங்கி, விவாதித்து வந்துள்ளதை இத்தருணம் நினைத்துப்பார்க்கின்றேன். இவ்விதமான கருத்துப்பரிமாறல்கள் இந்நூல் சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு மிகவும் உதவியிருக்கின்றன.

FedEx ‘கூரியர்’ மூலம் வதிலைப்பிரபா 20.03.2016 அன்று அனுப்பிய புத்தகப்பொதி , இன்று 24.03.2016 என் கைகளை வந்தடைந்தது. அனுப்பியதிலிருந்து எனக்குக் கிடைக்கும் வரையிலான அதன் வரலாற்றை இணையத்தின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. உலகமயமாக்கலின் பாதக விளைவுகளுக்கு மத்தியில் இவ்விதமான நன்மைகளுமுள்ளன.

கனடா நண்பர்கள் கவனத்துக்கு:
இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 163: அம்மாவின் நினைவாக…;தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!:கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

திருமதி நவரத்தினம்1. அம்மாவின் நினைவாக…

அவர் ஓர் ஆசிரியையாக விளங்கியவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம் மற்றும் அராலி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தான் அவரைப் பலருக்குத்தெரியும். யாழ் இந்து மகளிர் கல்லூரிக் காலகட்டத்தைச்சேர்ந்த அவரது சக ஆசிரியர்களுக்கு அவரை ‘மங்கை’ அல்லது ‘மங்கையற்கரசி’ என்றால்தான் தெரியும். அதுதான் அவரது வீட்டுப்பெயர். ஆனால் அவரது இயற்பெயர் மகேஸ்வரி. அது யாருக்குமே தெரியாது. கண்டிக்கவே தெரியாத ஆசிரியர்களில் அவருமொருவர். புவியியல், ஆங்கிலம் மற்றும் Home Science ஆகிய துறைகளில் பாடங்களை அதிகமாகக் கற்பித்தவர்.

வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து, அனைவருக்கும் உணவு தயாரித்து, மதிய நேர உணவினை அனைவருக்கும் தயார் செய்வார். அதிகாலைகளில் நாங்கள் குழந்தைகள் அனைவரும் அவர் பின்னால் கோழிக்குஞ்சுகளாகச் சென்ற காலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் திரும்பி விடுவேன். ஆனால் காலைகளில் பாடசாலை செல்லும்போது அவருடனேதான் செல்வதுண்டு.

நன்கு பாடும் திறமை மிக்கவர். சிறுவயதில் அவர் பாடும் பாரதியார் விடுதலைக்கீதங்களை (குறிப்பாகத் ‘தாயின் மணிக்கொடி பாரீர்), ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படப்பாடலான ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ ஆகிய பாடல்களை அவர் அவ்வப்போது பாடக்கேட்டு இரசித்திருப்பதும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

Continue Reading →