இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.
இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும், பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.