சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின் எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள்.
வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.
வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள். ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.