இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.
”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”
“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”
இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.
“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.
கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.
ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.
“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.