வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!

பாலமுரளி கிருஷ்ணா1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக…

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் ‘400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா? ‘ பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.

இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் ‘ஒரு நாள் போதுமா/’, ‘தங்கரதம் வந்தது’ மற்றும் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 209: அன்பரசியின்(அன்பு) தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்..’ பற்றிய கருத்துகள் பற்றி….

அன்பரசி உரைஅண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய அன்பரசி (அன்பு) அவர்களின் கூறிய கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று மீண்டுமொரு தடவை அவரது உரையினை உள்ளடக்கிய காணொளியினை (வடலி அமைப்பினர் யு டியூப்பில் வெளியிட்ட காணொளி) பார்த்தபொழுது தோன்றியது.

தனதுரையின் உரையின் ஆரம்பத்தில் அவர் தமிழினியக்கா என்று விளித்துக் கூறிய கருத்தொன்றில் நூல் பற்றிக் குறிப்பிடும்போது ‘தமிழினியக்கா அவரது அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு அவர் அறிந்த தரவுகள், தகவல்கள், அடிப்படையாக வைத்து நகர்கின்றது இந்நூல் என்றும், ‘போர் கொடுமையானது. அதை ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி’ என்றும் கூறுவார். ஆனால் காணொளியில் இந்த அவரது முடிவைத்தொடர்ந்து அவர் கூறிய பெரும்பாலான கருத்துகள் இக்கருத்துகளுக்கு எதிராகவே இருந்தன. எவ்விதம் அவரால் இந்த நூல் பற்றி இவ்விதமான இரு முரண்பட்ட கருத்துகளுக்கு வர முடிந்தது? அதனை அவர்தான் விளக்க வேண்டும்.

மேலும் மேற்படி நிகழ்வில் கலந்துரையாடலுக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பிரதி அல்ல. கிளிநொச்சியில் வெளியான நூலின் பிரதி அது. ஆனால் தனதுரையை ஆரம்பித்ததுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டதன் காரணமாக, காலச்சுவடு பதிப்பகத்தின் அரசியல் காரணமாக, அந்த அரசியலைத் தான் ஏற்காததன் காரணமாக காலச்சுவடு பதிப்பகப் பிரதியாக ஏற்கனவே எண்ணியிருந்ததால், அவ்வுணர்வுகளின் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையினை அந்நோக்கில் வைத்து ஆரம்பித்தார். இலங்கைப்பதிப்புக்கும் , காலச்சுவடு பதிப்புக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா? (பின் அட்டைப்பட அறிமுகத்தில் காலச்சுவடு பதிப்பகப் பிரதியிலுள்ள தவறு அனைவரும் அறிந்ததே.). அறிந்தவர்கள் அறியத்தரவும். ஏனெனில் நான் இன்னும் காலச்சுவடு பதிப்பகப்பிரதியினை வாசிக்கவில்லை. இரு பிரதிகளின் உள்ளடக்கமும் ஒன்றாக இருந்தால் காலச்சுவடு அரசியல் செய்கிறதென்ற தர்க்கம் வலுவாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 208 : டொராண்டோ: தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ பற்றி ஜான் மாஸ்ட்டர்!

ஜான் மாஸ்ட்டர்அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.

இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.

Continue Reading →

நினைவு கூர்வோம்!

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் இலங்கை அரசுடனான முரண்பாடுகளினால், அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளினால் மற்றும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்குகிடையிலான முரண்பாடுகளினால் பலியாகிய அனைத்துப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். சிறைகளில்…

Continue Reading →

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.தனது தொண்ணூறாவது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத்தலைவர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. லெனின், மாசேதுங், ஹோ சி மின் , சேகுவேரா வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். தான் நம்பிய மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் படை சமைத்து, பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த் ஃபிடல் காஸ்ட்ரோவின் வரலாறு அடக்கு முறைகளுக்கு எதிராகப்போராடும் புரட்சிகர சக்திகளுக்கெல்லாம் முன்மாதிரியானது.

அலுக்காமல், சலிக்காமல் நீண்ட நேரம் வரை உரையாற்றுவதில் வல்லவர் இவர். ஒரு சமயம் இவர் அவ்விதமாகத் தொடர்ந்து 9 மணித்தியாலங்கள் வரையில் உரையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்த ஒரு விடயத்தையும் பற்றி மிகவும் தெளிவாக, விரிவாக உரையாற்றுவதில் வல்லவரான இவரது அரசினை பெரும் வல்லரசான அமெரிக்காவாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ அமெரிக்கத் தலைவர்கள் முயன்று பார்த்தார்கள். அவரை அசைக்க முடியவில்லை. அமெரிக்க உளவுத்தாபனமான சி.ஐ.ஏ பல தடவைகள் இவரைக்கொல்ல முயன்று அனைத்து முயற்சிகளிலும் தோற்றே போனது. இறுதியில் மேற்கு நாடுகளே , அமெரிக்கா உட்பட, இவரது காலடியில் வீழ்ந்தன.

இவரது வெற்றிக்குக் காரணம் கியூபா மக்கள். பெரும்பான்மைக் கியூபா மக்கள் இவரை தம் அன்புக்குரிய தலைவராகக் கொண்டாடினார்கள். மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவனாக மானுட வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோ நிலைத்து நிற்பார்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்குமிடையில் நிலவிய நட்பும், இணைந்த நடத்திய கியூபாப் புரட்சியும் புரட்சிகர வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இவரது மறைவு வருத்தப்பட வேண்டியது அல்ல. கொண்டாடப்பட வேண்டியது.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு – கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு“பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது.” பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் – தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.

எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன்.  கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்கள்  வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா – மௌனகுரு தம்பதியரையும் கண்டேன். அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன். கொழும்பு – பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் ‘அப்பல்லோ’ சுந்தா சுந்தரலிங்கம்,  மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும். நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன். அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக  நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.  சித்திரலேகா அக்காலப்பகுதியில்   இலங்கை வானொலி கலைக்கோலத்தில்  இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன். இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும்   ஆளுமையை  இனம்காணாமல்  ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர்  காவலூர்   ராசதுரையிடமும்  சொல்லியிருக்கின்றேன்.

Continue Reading →

எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !

எஸ்.பொ

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் ,விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க லாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டு விடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

Continue Reading →

ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’

எழுத்தாளர் க.நவம்ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’ மெல்ல அவல் தேடும் மேற்குலக ஊடகங்களின் வாய்களுக்குள் அகப்பட்டு, அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது, வெர்மான்ற் (Vermont) பல்கலைக்கழகம்! அமெரிக்காவின் வடகிழக்கே, இயற்கையழகு கொஞ்சும் வெர்மான்ற் மாநிலத்துப் பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில் பறந்துகொண்டிருந்த கொடி ஒன்று, இந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 24-25) களவாடப்பட்டமையே அதற்கான காரணம். அது ‘Black lives Matter’ என அழைக்கப்படும் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தின் கொடி. கடந்த வாரம் சார்லெற் (Charlotte) நகரிலும், அதற்கு முன்னர் வேறுபல நகர்களிலும் கறுப்பு இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஏற்றப்பட்ட கொடி. ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியின் தேடல், வன்முறைக்கெதிரான போராட்டம் போன்ற இலட்சியங்களின் அடையாளச் சின்னமாகப் பறக்க விடப்பட்ட கொடி. பல்கலைக்கழக நிர்வாகத்தின் பூரண அங்கீகாரத்துடன், தேசியக் கொடியுடனும் மாநிலக் கொடியுடனும் சம உயரத்தில், சமாந்தரமாகப் பறக்க விடப்பட்ட கொடி. இனவாதிகள் அதனை இரவோடிரவாகக் களவாடியமை, எரிகின்ற இனவெறுப்புச் சூளையினுள் எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கின்றது!

அமெரிக்கக் காவற் துறையினரின் கடும் போக்கும், அதன் விளைவாக  இனவுறவில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் சமூகத்தில் ஆழ ஊடுருவியுள்ள இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள, வெர்மான்ற் பல்கலைகழகக் கொடியகற்றற் சம்பவம், இனப் பதற்றத்திற்கு மென்மேலும் ஊட்டம் அளித்துள்ளது. ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் குறித்த புதிய சர்ச்சைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழி திறந்துள்ளது. நல்ல நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வெவ்வேறானோர் வெவ்வேறு விதங்களில் அர்த்தம் கொள்ள வகைசெய்துள்ளது.

‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் (BLM) வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அதுவே ஒரு இனவெறுப்பு இயக்கமென்றும், வெர்மான்ற் பல்கலைகழக நிர்வாகம் இவ்வியக்கத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், பண்பாட்டு மோதலொன்றின்போது பல்கலைகழகம் பக்கச்சார்புநிலை எடுத்துவிட்டதாகவும், இனிவருங் காலங்களில் தீவிரவாதக் குழுவொன்றின் கொடியையும் ஏற்றிவைக்கப் பல்கலைகழக நிர்வாகம் சம்மதிக்கக் கூடும் என்பதாகவும் வெள்ளையின அடிப்படைவாதிகளும் பழமைவாதிகளும் குற்றம் சாட்டத் துவங்கியுள்ளனர். இக்குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் BLM இயக்கத்தின் மூலகர்த்தாக்களோ, இதற்கு முற்றிலும் முரணான வாதத்தை முன்வைத்துள்ளனர். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் உணர்ந்தவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள் எனவும், BLM பற்றி இத்தகைய தவறான பரப்புரையை அவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Continue Reading →