முன்னுரை
வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.
போரில் வீரர்களின் வலிமை
வலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போராகும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.
பகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.
“ வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார்நிலை ” (தொல்.புறத்.1018:3-4)
பகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.
இன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.
“ கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும் ” (தொல்.புறத்.1018:7-8)
என்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.
போரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,
“ செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசய நூழிலும் ” (தொல்.புறத்.1018:14-17)