முன்னுரை:
ஒரு நாள் போதுமா? என்ற தலைப்பில் அமைந்த சு. சமுத்திரம் அவர்களின் குறுநாவல் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஒரு சமூக நாவல் ஆகும். சமூக நாவலில் மனிதநேயம் என்பது தவிர்க்கமுடியாததொன்று எனலாம். அந்த வகையில் இந்நாவலில் காணக்கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
நாவலும் நாவலாசிரியரும்:
வேலு-அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமாள் இன்னபிற கட்டிடத்தொழிலாளர்களின் ஆதரவோடு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முதலாளியின் தூண்டுதலால் அதிகமான பளுவைச் சுமந்த வேலு கீழே விழுந்து இறந்து விட இயற்கை மரணம் என்று மூடி மறைக்கின்றான் முதலாளி. அவனை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டுச் சங்க உறுப்பினர்களோடும் தொழிலாளர்கள் ஆதரவோடும் வெற்றி இலக்கோடு அன்னவடிவு போராடத் துவங்குவதாகக் கதை முடிகிறது.
சு. சமுத்திரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள திப்பண்ணம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலியிலும் தூதர்சனிலும் பணிபுரிந்தவர். 1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வந்தவர். 15 நாவல்களும் 8 குறுநாவல்களும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் ‘லியோடால்ஸ்டாய்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். சோசியலிசவாதி. அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990இல் வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தவிர தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 63ஆவது வயதில் 3.4.2003 அன்று வாகன விபத்தில் காலமானார். வேரில் பழுத்த பலா, வாடாமல்லி, பாலைப்புறா, ஊறுக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, கடித உறவுகள், மண்சுமை, தலைப்பாகை, வெளிச்சத்தை நோக்கி, வளர்ப்பு மகள், தராசு, சத்திய ஆவேசம், இல்லம்தோறும் இதயங்கள், நிழல் முகங்கள் ஆகியன சமுத்திரம் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
மனிதநேயம்:
உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனமாகும். இம்மனித இனத்தின் உயர்ந்த பண்பே மனிதநேயமாகும். உயர்ந்த பண்பெனப்படுவது அன்பு, கருணை, அருள், நட்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுதல் போன்றனவாகும். இப்பண்புகளின் ஒட்டு மொத்த வடிவமே மனிதநேயமாகும் எனலாம்.