]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். – வ.ந.கி ]
தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் ‘இது கூர்வாளல்ல. மொட்டை வாள்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து, சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில் அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.
இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.
சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.
1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்: