சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. அப் பதினெட்டு நூல்களையும்,
‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’
இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11) நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.
திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். ‘கொல்லாமை’, ‘கள்ளுண்ணாமை’ என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.
‘மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ
யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.’
இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.