1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக…
பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் ‘400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா? ‘ பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.
இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் ‘ஒரு நாள் போதுமா/’, ‘தங்கரதம் வந்தது’ மற்றும் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.